என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொதுமக்கள் மகிழ்ச்சி"
- 6 மாதத்திற்கு முன்பு இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
- சாமி ஊர்வலத்தை காண ஏராளமானோர் திரண்டனர்.
சிங்காரப்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ பட்டாபிராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை, மாலை என 2 வேளை பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் இந்த ஸ்ரீ பட்டாபிராமர் கோவில் செயல்பட தொடங்கியது.
கடந்த இரண்டு நாட்களாக ஆடிப்பெருக்கு தினத்தில் ஸ்ரீ பட்டாபிராமர் சாமி கோவிலுக்கு அருகில் உள்ள அனுமன் தீர்த்தம் பகுதியில் உள்ள அனுமந்தீஸ்வரர் ஆலயத்தில் கொண்டு சென்று புனித தீர்த்தம் கொண்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில் நொச்சிப்பட்டி கிராம பகுதி மக்கள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் தங்கள் பகுதிக்கு தற்பொழுது வரையிலும் சுவாமி ஊர்வலம் வந்ததே இல்லை. எனவே, தங்கள் ஊர் பகுதியில் சாமி ஊர்வலம் வருவதற்கு அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அளிக்கப்பட்ட உத்தரவின் பேரில் ஸ்ரீ பட்டாபிராமர் சாமி ஊர்வலம் நொச்சிப்பட்டி கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. இப்பகுதி மக்களுக்கு பிரமிக்கும் வகையில் காட்சி யளித்தார். சாமி ஊர்வலத்தை காண அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்.
200 ஆண்டுகளாக சாமி ஊர்வலம் காணாத அப்பகுதி மக்கள் தற்போது தங்களது ஊரில் சாமி திருவீதி உலா வருவதை கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
- இளைஞர்கள் போட்டிபோட்டு மீன்களை ஆர்வத்துடன் பிடித்துச் சென்றனர்.
- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குளத்துக்குள் இறங்கி மீன்களை பிடித்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப்பாடி பெரிய மந்தை குளத்தில் 20 வருடங்களுக்குப் பிறகு சமத்துவ மீன்பிடி திருவிழா இன்று நடந்தது. ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த மீன்பிடித் திருவிழாவில் திண்டுக்கல், வடமதுரை, பெரியகோட்டை, முள்ளிப்பாடி, சீலப்பாடி, ம.மு. கோவிலூர், வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குளத்துக்குள் இறங்கி மீன்களை பிடித்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக சிறிய வலைகள் மற்றும் கூடைகளை பயன்படுத்தி மீன்பிடித்தனர்.
இதில் ஜிலேபி, கட்லா, ரோகு, மீசை விறா, கெழுத்தி உள்ளிட்ட பல்வேறு மீன்கள் பிடிபட்டது. ஒரு கிலோ முதல் 20 கிலோ வரையிலான மீன்கள் வலையில் சிக்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மீன்பிடி திருவிழாவில் 1½ டன் வரை மீன்கள் பிடிக்கப் பட்டதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.
விழாவில் கலந்து கொண்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் போட்டிபோட்டு மீன்களை ஆர்வத்துடன் பிடித்துச் சென்று தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.
- மாநகரம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
- கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே மழைநீர் சாலைகளில் பாய்ந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் நேற்று காலை வெயில் அடித்தது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 5 மணி அளவில் திடீரென மழை கொட்டித்தீர்த்தது. மாநகரம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நொய்யல் ஆற்றில் மழைநீர் அதிகமாக பாய்ந்தது. சமீபத்தில் தான் நொய்யல் ஆறு, ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடை ஆகியவை தூர்வாரப்பட்டது. இதன்காரணமாக மழைநீர் தடையின்றி பாய்ந்தது.
கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே மழைநீர் சாலைகளில் பாய்ந்தது. திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட சத்யாநகர் பகுதியில் மழைநீர் செல்ல வழியில்லாமல் 3 வீடுகளுக்குள் புகுந்தது. அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஊத்துக்குளி அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மின்னல் தாக்கியதன் காரணமாக பனைமரம் தீப்பற்றி எரிந்தது.பலத்த மழையிலும் பச்சை மரம் தீப்பற்றி எரிவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட காங்கயம், வெள்ளகோவில் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம்-55, கலெக்டர் முகாம் அலுவலகம் -68.50, திருப்பூர் தெற்கு அலுவலகம்-12,கலெக்டர் அலுவலகம்-113, அவினாசி தாலுகா அலுவலகம்-17, ஊத்துக்குளி தாலுகா அலுவலகம்-32, தாராபுரம்-42, மூலனூர்-36, குண்டடம்-25, உப்பாறு அணை-12, நல்லதங்காள் ஓடை-6, அமராவதி அணை-2, திருமூர்த்தி அணை-12, திருமூர்த்தி அணை ஐபி-11, காங்கயம்-33, வெள்ளகோவில் ஆர்.ஐ., அலுவலகம்- 52, வட்டமலை கரை ஓடை- 31.40, பல்லடம்-6. மாவட்டம் முழுவதும் மொத்தம் 565.90 மி.மீ., மழை பெய்துள்ளது. பலத்த மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. திருப்பூர் மாநகரில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.மேலும் சிதலமடைந்த சாலைகள் மழையால் சேறும் சகதியுமாக மாறியுள்ளன.
- சுமார் 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகும் லேசாக தூரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
- பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் அப்பகுதிகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் புதுச்சேரியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை வானில் கரு மேகங்கள் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தோன்றி குளிர்ந்த காற்று வீசியது.
தொடர்ந்து 6 மணிக்கு மேல் இடி-மின்னலுடன், மழை பெய்யத்தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகும் லேசாக தூரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
கன மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான இடங்களில் மின்தடை செய்யப்பட்டது. 2 மணி நேரம் பெய்த மழையால் நகரின் பிரதான சாலைகளான புஸ்சி வீதி, காந்தி வீதி, சின்னசுப்புராயப் பிள்ளை வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகனங்கள் மழை நீரில் தத்தளித்தப்படி மெதுவாக ஊர்ந்து சென்றன. கடற்கரை சாலையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீரில் சுற்றுலா பயணிகள் சிலர் ஆனந்த குளியல் போட்டனர்.
நகரின் பல வீதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கின.
அதுபோல் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் அப்பகுதிகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. அப்போது மின் நிறுத்தம் செய்யப்பட்டதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை. உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மரக்கிளைகளை அகற்றினர்.
அதுபோல் மின்துறை ஊழியர்களும் அறுந்து விழுந்த மின் கம்பிகளை சீரமைத்தனர். மழை நின்ற பிறகு மின் விநியோகம் செய்யப்பட்டது.
இன்று காலையிலும் லேசாக தூரல் மழை பெய்தது. வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- நேற்று மாலை திடீரென லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து மிக பலத்த மழையாக இரவு முழுவதும் பெய்து கொண்டிருந்தது.
- பல்வேறு பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் நடந்து சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பரமத்தி, கூடச்சேரி, ஒத்தக்கடை, குன்னமலை, இரும்பு பாலம், நல்லூர், கந்தம்பாளையம், மணிய னூர், பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சுள்ளிப்பாளையம், சோழ சிராமணி, ஜமீன் இளம்பிள்ளை, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், தி.கவுண்டம்பாளையம், பெரிய சோளிபாளையம், கபிலக்குறிச்சி, கபிலர்மலை, இருக்கூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பொன்மலர்பாளையம், சேளூர், பிலிக்கல் பாளையம், அ.குன்னத்தூர், வடகரையாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து மிக பலத்த மழையாக இரவு முழுவதும் பெய்து கொண்டிருந்தது.
அதேபோல் இன்று காலையும் சாரல் மழை பெய்தது. மிக பலத்த மழையின் காரணமாக தார் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள், பல்வேறு பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் நடந்து சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். அதேபோல் சுற்றுவட்டார பகுதிகளில் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், மண்பானை விற்பனை கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள், பலகார கடைகள், சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும் பலத்த மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியா மல் அவதிப்பட்டனர்.
தொடர்ந்து வாட்டி வந்த கடும் வெயிலின் தாக்கம் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள், பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். நேற்று முதல் அக்கினி நட்சத்திரம் தொடங்கிவிட்ட காரணமாக அக்னிவெயில் தொடங்கி யது.
இந்நிலையில் மிகப் பலத்த மழை பெய்து கொண்டிருப்பதால் பூமியின் சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோ சன நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வெயிலின் கடும் தாக்கம் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் வறண்ட கிணறுகளில் ஊற்றெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பலத்த மழையால் தார் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பலத்த மழையின் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. கடந்த மாதமே தொடங்க வேண்டிய இந்த மழை பல இடங்களில் ஏமாற்றி சென்றது. புயல் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் வடகிழக்கு பருவ மழையின் அளவு சராசரியை விட குறைவாகவே பதிவானது.
இந்நிலையில் நேற்று காலை முதல் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும், தேனி மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பெரியாறு அணையின் நீர் மட்டம் 125.05 அடியாக உள்ளது. அணைக்கு 186 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3,629 மில்லியன் கன அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர் மட்டம் 56.23 அடி. வரத்து 659 கன அடி. திறப்பு 60 கன அடி. இருப்பு 2,921 மில்லியன் கன அடி. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 50 அடி. வரத்து 9 கன அடி திறப்பு 60 கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 119.85 அடி. வரத்து 9 கன அடி. திறப்பு 27 கன அடி.
பெரியாறு 7, தேக்கடி 3.8, கூடலூர் 2.4, சண்முகா நதி அணை 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வந்தது. தமிழகத்தின் பிறபகுதிகளில் மழை பெய்தபோதும் திண்டுக்கல் மாவட்டத்தில் வறண்ட வானிலையே காணப்பட்டதால் பொதுமக்கள் குடிநீருக்காக அலைந்து திரிந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் மிதமான சாரல் மழையினால் பூமி குளிர்ந்து உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தற்காலிக தீர்வு ஏற்படும்.
திண்டுக்கல் 4.6, கொடைக்கானல் 4.3, பழனி 2.0, சத்திரப்பட்டி 7, நத்தம் 7.5, நிலக்கோட்டை 16, வேடசந்தூர் 0.3, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 0.3, காமாட்சிபுரம் 2.3, கொடைக்கானல் போட்கிளப் 5 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 49.3 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்ட உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்களுக்கு வட மாநிலங்களில் இருந்து வெள்ளைபூண்டுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மருத்துவ குணம் நிறைந்த இந்த வெள்ளை பூண்டுகளை அதிக அளவில் பொதுமக்கள் வாங்கி செல்வார்கள்.
ஒரு கிலோ வெள்ளை பூண்டு 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனையாகும். ஆனால் கடந்த சில நாட்களாக பூண்டு வரத்து அதிகரிப்பால் அதன் விலை படிப்படியாக குறைந்துள்ளது.
சேலம் செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட்டில் நடுத்தரமான வெள்ளை பூண்டு கடந்த சில நாட்களாக ரூ.20-க்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கிலோ கணக்கில் வாங்கி செல்கிறார்கள். மேலும் தெரு தெருவாக வண்டிகளில் கொண்டு சென்றும் வெள்ளை பூண்டுகளை வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். அதனையும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.
மேலசொக்கநாதபுரம்:
போடியில் கடந்த பல நாட்களுக்கு பிறகு நேற்று மாலை சாரல் மழை பெய்தது. நேரம் செல்லச்செல்ல கன மழையாக மாறி நகர் முழுவதும் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
இரவு 7 மணி முதல் 9 மணி வரை இடைவிடாது பெய்த மழையினால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் கழிவு நீருடன் சேர்ந்து பெருக்கெடுத்து ஓடியது.
கரட்டு பட்டி என்ற இடத்தில் 100 ஆண்டு பழமையான மரம் இருந்தது. இந்த மரத்தின்மீது இடி விழுந்ததில் 90 சதவீத பகுதி முறிந்து தரைமட்டமானது. அந்த நேரத்தில் பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது. அதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தபடி இருந்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு போடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழையினால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
போடி தாலுகா பகுதியில் நேற்று விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. தேவர் சிலையில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மேளதாளம் முழங்க கொட்டக்குடி பெரியாற்றில் கரைக்க எடுத்து சென்றனர். ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாகவே சாரல் மழை பெய்ததால் போலீசார் விரைவாக சிலைகளை கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இருப்பினும் ஊர்வலம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கன மழை பெய்யத் தொடங்கியது.
இதனால் விநாயகர் சிலைகளும் நனைந்தது. இதனையடுத்து சிலைகளை நனையாமல் பிளாஸ்டிக் கவர் மூலம் மூடி ஊர்வலமாக எடுத்து சென்று கொட்டக்குடி பெரியாற்றில் கரைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்